search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்பொலி செல்லப்பன்"

    தமிழறிஞர் மற்றும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனருமான சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #SilamboliSellappanDead #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, குடிமக்கள் காப்பியம் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் சீர்மிகு பெருமைகளை செந்தமிழ் நாட்டின் குக்கிராமங்கள் தோறும் கொண்டு சென்று சேர்த்து, தமிழ்க்குவலயம் எங்கும் குன்றாப் புகழ்பெற்ற, முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மறை வெய்தினார் என்ற பேரிடிச் செய்தி கேட்டு பெருந்துயருக்குள்ளானேன். அவரின் மறைவிற்கு தி.மு.க.வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தலைவர் கலைஞர் “பொன்னர் சங்கர்” எனும் நெடுங்கதையை எழுதிட துணைபுரிந்தவர் சிலம்பொலியார். சிலம்பொலியார் திராவிட இயக்கப்பற்று மிக்கவர்; பகுத்தறிவு, சுயமரியாதை போற்றியவர். சிலம்புச் செல்வரையும், சிலம்பொலியாரையும் தமிழ் உலகம் என்றும் மறக்காது.



    இன்றைக்கு சிலம்பொலி செல்லப்பன் மறைந்தாலும், அவருக்கும் தமிழுக்கும் உள்ள ஆழ்ந்த உறவு, அவரால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவர் ஆற்றிய எளிமையான சிலப்பதிகார உரைகள் இனி வரும் இளைய தலைமுறைக்கு பாடமாக மட்டுமின்றி தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய பரிசாகவும் இருக்கும் என்பதில் அய்யமில்லை.

    தமிழ்மொழிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பான அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்கூறும் நல்லுலகிற்கும், தமிழறிஞர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சிலம்பொலி செல்லப்பன் மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். #SilamboliSellappanDead #DMK #MKStalin
    நாமக்கலைச் சேர்ந்த தமிழறிஞர் மற்றும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனருமான சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானார். #SilamboliSellappanDead
    நாமக்கல்:

    சிலம்பொலி செல்லப்பன்  1929ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் பிறந்தவர் ஆவார்.  இவர் கணித ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர். தமிழ் எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் ஆவார். உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குனர், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளையாற்றியவர்.

    தமிழுக்கு பல்வேறு வகையில் பெரும் தொண்டு ஆற்றியுள்ளார்.  சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கிய தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றுள்ளார்.  இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சி துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.



    இந்நிலையில் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நல குறைவினால் இன்று காலமானார். இவர் தமிழகத்தின் 3 முதல்வர்களிடமும் பணியாற்றிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #SilamboliSellappanDead

    ×